கேரளா மாநிலத்தில் ஐஸ்வரியத்தை வரவேற்கும் விழாவாக ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவின்போது, வாமனனின் பாதத்தை தலையில் சுமந்த, மகாபலி மன்னன், கேரளத்து குடிமக்களின் வீடுகளில் வாசம் செய்வதாக நம்பிக்கை. அதனால் விழா தொடங்கிய முதல் பத்து நாட்களில் மகாபலி மன்னனை வரவேற்க, வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவர்.
பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலின் ஊழியர்கள் குன்னூர் ரயில் நிலையத்தில் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதில், மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் மூலமாக உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு, குன்னுார் ரயில்வே நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்கோலத்தை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
நீலமலையின் நீல வண்ணத்தை குறிக்கும் வகையிலும், மலை ரயில், நீலகிரியின் இயற்கை எழிலை காக்கும் வகையிலும் ஊழியர்கள் நீல வண்ண உடையும், கேரள மாநிலத்தின் பாரம்பரிய வேட்டியும் அணிந்து பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து ஊழியர்களுக்கு ஓண சத்யா விருந்து வழங்கப்பட்டது. இந்த பண்டிகையை நுாற்றுக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.