நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டப்பெட்டு கிராமத்தைச் சேர்ந்த பாதனின் மகன் சந்திரமோகன் (42). இவர் குடிநீர் ஆப்பரேட்டராக உள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 22) காலை, மோட்டாரை இயக்குவதற்காக கிணற்று பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த காட்டெருமை, திடீரென சந்திரமோகன் வயிற்றைக் கிழித்து தாக்கியுள்ளது. பின் அவரைத் தூக்கி வீசியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சந்திரமோகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் ஊரில் தண்ணீர் வராததால் சந்திரமோகன் மனைவி கிணற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது சந்திரமோகனை காயத்துடன் கண்டு அவர் கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த ஊர் பொதுமக்கள் சந்திரமோகனை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். பின் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு 15 வயதில் ஒரு பெண்ணும் 12 வயது பையனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சம்பவம் குறித்து மிகுந்த சோகத்துடன் இருந்த பொதுமக்கள், வனத் துறையினர் உடனடியாக வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் விரைவில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு