நீலகிரி : உதகையில் பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசுகையில், ”உதகை அருகே உள்ள குந்தா அணையை ஒட்டி உள்ள 40 ஏக்கர் நிலம் மின்வாரியத்திற்கு சொந்தமானது.
20 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் உறவினர்களான சிவக்குமார், வாசுதேவன் ஆகியோர் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல வழிவிடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு குந்தா அணையை தூர்வார உலக வங்கி 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
ஆனால் தூர்வாரப்படும் களிமண்ணை புத்திசந்திரனின் உறவினர் ஆக்கிரமித்துள்ள 40 ஏக்கர் நிலத்தில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதற்காக ஒதுக்கப்பட்ட 31 கோடி ரூபாய் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
இதுகுறித்து, குந்தா பகுதியை சார்ந்த சமூக செயற்பாட்டாளர் ராஜகோபால் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புத்திசந்திரனின் உறவினர்கள் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு பூங்கா அமைக்க கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை.
உடனடியாக மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர்களிடமிருந்து மீட்க வேண்டும். விவசாயிகள் பயன்படுத்த சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: காவல்துறைக்கு எதிரான வழக்குள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்