நீலகிரி: பந்தலூர் தாலுகாவிற்குள்பட்ட ஒனீமூலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சத்யா தம்பதி. இவர்களுக்கு ஜெயபிரபா என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. ஜெயபிரபா மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார். அதன் பின்பு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாகக் குழந்தையின் வயிறு அவ்வப்போது வீங்குவதுடன் குழந்தை உணவு உண்ண முடியாமலும் வலியாலும் வேதனை அடைந்தது. இதனை அடுத்து கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற பொழுது மருத்துவர்கள் குழந்தையின் கல்லீரல் முற்றிலும் பழுதாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்தச் சிகிச்சையை வேலூரில் உள்ள சிஎம்சி (CMC) மருத்துவக் கல்லூரியில் மட்டுமே செய்ய முடியும். அதற்காகக் கிட்டத்தட்ட 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை அறிந்த ஊர் மக்கள் தங்களால் இயன்ற சிறிய அளவில் பண உதவிகளை வழங்கினர். இதுவரை 80 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் திரட்டப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொடர்ந்து பொதுமக்கள் ஊக்கமளித்து கூடலூரிலிருந்து வேலூர் செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஊர்தி சேவையும் இலவசமாக ஏற்பாடுசெய்துள்ளனர்.
முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொண்டு உயிருக்குப் போராடும் தங்கள் குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனக் குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க : 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி