நீலகிரி மாவட்டம் கூடலூரில் மண்ணின் மைந்தர்களாக உள்ள ஐந்து ஆதிவாசிகளான குரும்பர், பனியர், காட்டு நாயக்கர், தோடர், மவுண்டாடன் செட்டி போன்ற சமுதாய மக்கள் காலங்காலமாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கற்காலம் முதல் கலாசாரம் அழியாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் அனைத்துவகை மக்கள் செழிப்புடன் வாழவும், மழை பெய்து லாபம் தரவும் புத்தரிசி திருவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த மக்கள் தங்களது விவசாய நிலத்தில் நெற்பயிரை பயிரிட்டு ஐப்பசி பத்தாம் நாள் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும். அப்போது முதலில் விளையும் பயிர்களை மக்கள் ஒன்றுகூடி பூஜை செய்து அதனை புதுவயல் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தலையில் சுமந்து ஆதிவாசிகளின் கலை, நடனம் மேள வாத்தியங்களுடன் பேரணியாக வந்து தங்களது குள கடவுளுக்கு பிரார்த்தனை செய்து அதனை மூன்றாக பிரிப்பது வழக்கம்.
மேலும், அதனை நம்பாலாகோட்டை வேட்டைக்கு கொருமகன், மங்குனி அம்மன், மகா விஷ்ணு போன்ற கோயிலுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அதனை அந்தந்த கடவுளுக்கு படைத்து முதல் பிரசாதமாக தயாரிக்கப்பட்டு பக்தர்கள், விவசாயிகளின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.
அந்த பகுதி முழுவதும் விவசாயம் செழிப்புடன் இருப்பதற்கும், பூமித் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பூஜை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வருடம் கரோனா தொற்று காரணமாக கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒவ்வொரு கோயிலிலும் தலா இரண்டு பேர் மட்டும் நெற்பயிருடன் சென்று பூஜை மட்டும் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது தவிர்க்கப்பட்டது.
இன்று புத்தூர் வயல் பகுதியில் நடந்த விழாவில் ஆதிவாசிகளின் கலை, நடனம் கலாசாரம் போன்றவற்றை காண உள்ளூர் மக்கள் மட்டும் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் பாரம்பரியமாக செய்யும் இந்த விழா தற்போது பிரபலமாகி வரும் நிலையில் இந்த வருடம் கரோனா தொற்றால் எளிமையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: