நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் அங்கு 450 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவே அதிபட்ச மழை என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவலாஞ்சியில் இருக்கும் உள்ள நீர் மின்நிலையத்தில் 44 பேர் சிக்கியுள்ளனர். இதில் 4 பேருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல போராட்டங்களுக்கு பின்னர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு கோவை மருத்துவமணையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர். மீதமுள்ள 40 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவலாஞ்சி நீர் மின்நிலையத்திற்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு, மரங்கள் விழுந்துள்ளதால், சாலை சீரமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் பேரிடர் மீட்பு குழு, ராணுவம், தீயணைப்பு துறையினர், வனத்துறை என 200க்கும் மேற்பட்டவர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.