நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பம்பலககோம்பை பழங்குடியின கிராமத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் 60 ஆண்டு காலமாக அவர்களின் தேவைக்காக போராடி வருகின்றனர். ஆனால் இங்கு வசிக்கும் மக்களுக்கு அரசின் சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பிடம் இதுவரை திறக்கப்படாமலும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராமலும் உள்ளது. கிராமத்திற்குச் செல்லும் சாலையும் மிகவும் பழுதடைந்துள்ளது. இப்பகுதிக்கு ஆய்வுக்குகூட அரசு அலுவலர்கள் வராததால் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக அக்கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்பவர் கூறுகையில், "பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதுடன், சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். படித்த பழங்குடியின பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடியினருக்கு 9% இட ஒதுக்கீடு வேண்டும் - அய்யாக்கண்ணு கோரிக்கை