நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது , பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னுாரில் இருந்து அளக்கரை அரவேணு செல்லும் சாலையில் குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திலிருந்து சாலையில் உலா வந்தது .
அப்போது, கரடியைப் பார்த்து பயந்துபோன வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கரடியை படம் பிடித்தனர். மேலும், கரடி குட்டிகளுடன் தாய் கரடி கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள், அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தினாலும், தாய் கரடி தனது குட்டிகளுடன் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யாமல் சாலையை கடந்து மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.