நீலகிரியில் கடந்த 30 ஆண்டு காலமாக தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேயிலை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். செவணன் கவுடர், ஜோகி கவுடர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளை மிரட்டும் கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும், தேயிலை கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பண்டைய பழங்குடி படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றாவிட்டால், இனிவரும் காலங்களில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகள்: சிசிடிவி கேமரா பொருத்த விவசாயிகள் கோரிக்கை