கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அப்படி காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மிரட்டி பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து உதகையில் பேசிய அகில இந்திய மோட்டார் தொழிலாளர் கட்சி நிர்வாகிகள், “நீலகிரி மாவட்டத்திலிருந்து காய்கறி உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளில் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மிரட்டி பணம் கேட்கின்றனர்.
பணம் அளித்தப் பின்புதான் செல்ல அனுமதிக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். எனவே அரசு காய்கறி லாரி ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், பணம் வசூலிக்கும் காவல் துறையினர், வட்டார போக்குவரத்துத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் புகார்கள்: வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்