நீலகிரி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டைக் கடந்தும் மவுசு குறையாத மலை ரயில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடே செல்லும் நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம் – ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைப் பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
இவை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் கடந்த ஐந்து நாள்களாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள்கள் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர், ஊட்டி இடையே இயங்கும் மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதுவரை வெறிச்சோடி இருந்த ரயில்நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களை கட்டியுள்ளது.
இதையும் படிங்க : கரோனா : மக்களிடம் விநாயகர் சிலைகளை சேகரித்த காவல் துறை