புதுச்சேரி மாநிலத்தின் காவல்துறை தலைமை அலுவலர் சுந்தரி நந்தாவின் தாயார் மறைவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுந்தரி நந்தாவின் இல்லத்திற்கு வந்து, அவரது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகைக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த முறை பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, வெளிநாட்டு கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு பதவியேற்ற 90 நாட்களில் 15 லட்சம் வீதம் வங்கியில் செலுத்தபடும். வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் ரத்து என்று அறிவித்த மோடி இதுவரை திட்டங்களை செயல்படுத்தவில்லை" என்றார்.
மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் 5.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. அதில் மக்கள் மயங்கியுள்ளனர். மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டு வந்து இந்தியை கட்டாயமாக்க முயற்சி எடுத்துவருகிறது. இதற்கு புதுச்சேரி, தமிழ்நாடு, தென்மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், "ஒரே ரேஷன் கார்டு என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ரேஷன் கார்டு குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் இதில் மத்திய அரசு தலையிட கூடாது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் அதிமுக அரசு மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்டளைக்கு கட்டுபட்டு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசு ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மௌனமாக உள்ளது" என்றார்.