நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியின பண்பாட்டு மையத்தில் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, 9 துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இதையடுத்து, உள்ளாட்சி, பொதுப்பணித் துறை சார்பில் ரூ.15.59 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், "ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் சார்பில் ரூ.6.53 கோடி மதிப்பில் 15 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைக்கபட்டன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2 ஆயிரத்து 751 பயனாளிகளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பில் இலவச ஆடு, கோழிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 பயனாளிகளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில், தண்ணீர் பஞ்சத்தை போக்க கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக, 4 ஆயிரத்து 900 எம்எல்டியாக இருந்ததை 7 ஆயிரத்து 500 எம்எல்டியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மழை இல்லை என்றாலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல பேர் வீடுகளின்றி தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சமூக நலத்துறை சார்பில் 525 பயனாளிகளுக்கு 4.28 கோடி மதிப்பிலான தாலிக்கு தங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 382 பயனாளிகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை, தோட்டக்கலை துறை, உள்ளாட்சி துறை வேளாண் துறை, ஆதிவாசி மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 3 ஆயிரத்து 852 பயனாளிகளிகளுக்கு ரூ.11.86 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இதையும் படிங்க: அட்டகட்டியில் அம்மா மினி கிளினிக் - திறந்துவைத்த அமைச்சர் வேலுமணி!