நீலகிரி: குன்னூரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, வீடுகள் சேதம் அடைந்து, மரங்கள் சாய்ந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் மழையில் சேதம் அடைந்த பகுதிகளை நேற்று (நவ.23) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்துள்ளது.
மேலும், மழையினால் மேல் குன்னூர் பகுதி மற்றும் முத்தாலம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலவாசவி அருகே மண்சரிவு ஏற்பட்ட பகுதியை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் புஷணக்குமார், வட்டாச்சியர் கனி சுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, வீடுகளை இழந்து சமுதாயக் கூடத்தில் உள்ளவர்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.
மழையினால் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாலையில் விழுந்ததால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சாலை சீரமைப்புப் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
மேலும், ஆற்றங்கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மரங்கள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டால், உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், கனமழையில் வாகனங்களை கவனமுடன் ஓட்ட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கனமழை.. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்!