நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளபட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, உதகமண்டலத்தில் உள்ள தமிழ்நாடு அரசினர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 269 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில், விரைவில் கூடலூரில் ஒரு கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை 921 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க ஒன்றிய அரசிடமிருந்து 30 ஆயிரம் வயல் மருந்துகளை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை 1,790 வயல்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவல் குறித்து ஆராய 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கபட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை வந்தவுடன் முதலமைச்சரிடம் வழங்கி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிகளை மீறி ஏரியில் மீன்பிடித்த மக்கள்!