நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா, நாடுகாணி, புளியம்பாறை போன்ற பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக காட்டு யானை நுழைந்து கடைகள், வீடுகளைச் சேதப்படுத்தியது. யானையைப் பிடித்திட கோரி அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அட்டகாசம் செய்துவரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்படும் அல்லது முதுமலைக்கு கொண்டுசெல்லப்படும் என வனத் துறை கூறியதைத் தொடர்ந்து, போராட்டங்கள் கைவிடப்பட்டன.
அன்று முதல், 40 பேர் கொண்ட வனக் குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர்.
யானை கிராமப் பகுதிக்கு அருகில் இருப்பதால், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து நான்கு கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மேகமூட்டம், மழை பெய்துவருவதால் யானையை விரட்டும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, வனத் துறையினர் கும்கி யானைகள் மூலமாகவும் டிரோன் கேமரா மூலமாகவும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நான்கு ஆண்டுகளில் 68 யானைகள் மின்சாரம் பாய்ச்சி பலி: ஆர்டிஐ தகவல் தரும் அதிர்ச்சி!