நீலகிரி: கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், ஈளாடா பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். சிவக்குமாருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அன்னூரில் வசித்து வந்தனர். சிவக்குமார் கூலி வேலை செய்து கொண்டு தனது தாயுடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரைக் காணவில்லை என காவல் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த இருவரால் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
மதுபோதையில் கொலை செய்த விஷ்ணு, அவரது மனைவியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விஷ்ணுவின் மனைவி சிவக்குமாரின் மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில் கொலை செய்த விஷ்ணுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கொலை செய்த விஷ்ணுவின் வாக்குமூலம்படி, கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள பொன்னூர் பகுதியில் சாலையோர வனப்பகுதியில் உள்ள புதருக்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட நிலையில், சிவக்குமாரின் உடல் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தடயங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடல் சிவக்குமார் என்று காவல் துறை உறுதி செய்தனர்.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு, காரைக்குடியில் தலைமறைவாக இருந்த விஷ்ணு மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், தற்போது சம்பவம் நடைபெற்ற இடமான பொன்னூர் பகுதிக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திலேயே சிவக்குமாரின் உடலை உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவர், காவல் துறையினர் கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் விஷ்ணு, தங்கப்பாண்டி ஆகிய இருவரையும் காவல் துறையினர் அவர்களது வாகனம் மூலம் காவல் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்கான பணிகளை காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோத்தகிரியில் கூலி தொழிலாளி கொலையில் திடுக் திருப்பம்..! மனைவியிடம் மதுபோதையில் உளறியதால் வெளி வந்த ரகசியம்!