நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தொடக்க விசாரணை முடிந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வழக்கின் புகார்தாரரும் முதல் சாட்சியுமான கிருஷ்ணா தபா முதல் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதே போல இன்று நடைபெற்ற இரண்டாவது விசாரணைக்கும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆனால் மற்ற சாட்சிகள் ஆஜராகினர். அவர்கள் சரியான சாட்சிகள்தானா என விசாரித்துதான் நீதிமன்றம் சாட்சியாக எடுக்க வேண்டும் என சயான் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதேபோல குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் உள்ளிட்ட 10 பேரும் ஆஜராகினர். அப்போது இந்தி, மலையாளம் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் வைக்க இருதரப்பினரும் மனுத்தாக்கல் செய்தனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்ட நிலையில், விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கபட்டது.
கோடநாடு சம்பவத்துக்குப் பிறகு நேபாளம் சென்ற முதல் சாட்சி கிருஷ்ணா தபா தலைமறைவானார். அவரைத் தேடி கோத்தகிரி போலீசார் பலமுறை நேபாளம் சென்றபோதும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கிருஷ்ணா தபா கிடைக்காததால் ஆள்மாறாட்டம் செய்ய அரசு தரப்பு முயற்சிப்பதாக சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். இதனால் கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க; கொரோனா வைரஸ் - விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!