நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூரில், பாரி அக்ரோ எனும் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தோட்டம், அரசு நிலம் சிலவற்றை ஆக்கிரமித்து இதன் உரிமையாளர் செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், பந்தலூரில் இருந்து அத்திகுன்னா, அத்திமா நகர், உப்பட்டி போன்ற பகுதிகளுக்கு பொதுமக்களை விடாமல், தடுப்பு வேலி அமைத்து இந்த பகுதியை தனியார் நிர்வாகம் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறது.
இதுகுறித்து கடந்த வாரம் நடந்த ஜமபந்தியில், மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலையை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு நிலம் என்பது தெரிய வந்ததால், கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் உத்தரவின் பேரில், வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்டோர் அந்த தடுப்பு வேலியை அகற்ற சென்றனர்.
அப்போது அங்கு வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவன அலுவலர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமலும், அரசு அலுவலர்களை தரக்குறைவாகவும் பேசினர். மேலும், பல மணி நேரம் போராடியும் காவல்துறையினர் ஒத்துழைப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.