உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 100க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்காக பூங்காவின் பின்புறத்தில் குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது.
இதனால் மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குடியிருப்பு அருகே சாலையில் சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை பூங்கா பணியாளர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். இதன் பின்னர் உதகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலர், வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த சிறுத்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
வனத்துறை ஊழியர்கள் அருகில் சென்றதும் கோபம் அடைந்த அந்த சிறுத்தை அவர்களை தாக்க எழுந்தது. ஆனால் உடல் நிலை மோசமாக இருந்ததால் நடக்க கூட முடியாமல் தவித்தது. இதன் பின்னர் உயிருக்கு போராடிய சிறுத்தை மீது வனத்துறையினர் வலையை வீசி பத்திரமாக பிடித்தனர். பின்னர் மருத்துவ சிகிச்சைகாக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... ஹைதராபாத் சாலையில் உலாவரும் சிறுத்தை: பொதுமக்கள் கிலி!