நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு அருகே உள்ள சின்ன பிக்கட்டி கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இந்தத் தேயிலை தோட்டத்திற்கு நூற்றாண்டு காலமாக இப்பகுதி மக்கள் சென்று வந்த பாதையில் திடீரென தனிநபர் ஒருவர் கேட் அமைத்து தடுத்துள்ளார்.
இதனால் பசுந்தேயிலை மூட்டைகளை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அருவங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீர்வு காண கோரி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறை அலுவலர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தீர்வு கிடைக்காவிட்டால் மேலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி சான்றிதழ் வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டம் !