நீலகிரியில் உள்ள கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 14 மருத்துவப் பணியிடங்கள் உள்ள நிலையில் எட்டு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகள் நான்கு மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கூடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இங்கு வரும் நோயாளிகள் காத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.
மருத்துவர்கள் பலரும் தனியார் கிளினிக்கில் பணியாற்றுவதால் இதுபோன்ற நிலை ஏற்படுகின்றது. கூடலூரில் உள்ள 108 அவசர ஊர்தி வாகனங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இப்படி பல சிக்கல்கள் அரசு மருத்துவமனையில் உள்ளது. அலுவலர்கள் உரிய ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.