நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் ஆடு, மாடு மேய்ப்பது போன்ற பணிகளை பிரதான தொழிலாக செய்துவருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு கிராம தொழில் ஆணையம், நீலகிரி ஆதிவாசி சங்கம் இணைந்து முதல் முறையாக ஒவ்வொரு பயனாளருக்கும் இலவசமாக 10 பெட்டிகள் உட்பட 250 தேனீப் பெட்டிகள் , தேனீக்கள் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கின.
இரண்டு மாதம் முடிந்த நிலையில் தேன் அறுவடை செய்யும் பணி தொடங்கியது. இந்த கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்குள்ள பூக்கள் மூலம் தரமான தேன் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட ஒவ்வொரு பெட்டியிலும் அதிகளவில் தேன் இருப்பதால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்கட்டமாக ஒரு லிட்டர் 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதி என்பதால் இந்த தேனுக்கு அதிக மருத்துவ குணம் உள்ளதாகவும், இந்தத் தொழிலை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அறுவடை செய்யப்படும் தேனை, அரசு கொள்முதல் செய்து சந்தைப்படுத்தி நல்ல விலை பெற்று தர வேண்டும் எனவும் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் போல் நாளை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கலாம் - ஹெச். ராஜா