நீலகிரி மாவட்டம் உதகையில் நகராட்சி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மளிகை கடை, காய்கறி கடை, பேக்கிரிகள், டீ கடை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நகராட்சி சந்தையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மூன்று வாகனங்கள் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அணைக்க முயற்சித்தனர். ஆனால் அப்பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவத் தொடங்கியது.
பின்னர் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு வந்த தண்ணீரின் உதவியுடன் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்தை மாவட்ட ஆட்சியர் இன்ன்செண்ட் திய்வா, நகராட்சி ஆணையர் சரஸ்வதி, காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்னசெண்ட் திவ்யா பேசுகையில், ''தீ விபத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் பற்றி நாளை அறிவிக்கப்படும். அதுவரை நகராட்சி சந்தை செயல்படாது'' என தெரிவித்தார்.
தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டு வெடியால் உயிருக்குப் போராடும் பசு: விலங்குகளுக்கு எதிராகத் தொடரும் சோகம்!