நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) நடைபெற்றது. அந்தப் பேரூராட்சியில் அதிமுக, காங்கிரஸ், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட நான்கு பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் துபாயில் இருக்கும் சல்மான் பாரிஸ் (25), நவ்ஷாத் அலி (34), சைபுல்லா (25), அனாஸ் (25) ஆகியோரின் வாக்குகள் பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருப்பவர்களின் வாக்குகள் கள்ள ஓட்டாகப் போடப்பட்டுள்ளது.
இது குறித்து சுயேச்சை வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேவர்சோலை பேரூராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர், கூடலுார் ஆர்டிஓ ஆகியோரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
வாக்குப்பதிவு முடிந்த மறு நாளான நேற்று இவர் தனது முகவரிடமிருந்த வாக்காளர் பட்டியலைப் பார்த்தபோது 4ஆவது வார்டு மச்சிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் நான்கு நபர்களின் வாக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
உரிய விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டுப் பதிவுசெய்த நபர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் அலுவலருக்குப் புகார் மனு அனுப்பி உள்ளார்.
கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதால் நாளை (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் புதிதாக மாணவர்களுக்கு மந்தாகினி திறப்பு