உலகளவில் ஜூலை 29ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் 80 விழுக்காடு புலிகள் உள்ளன. 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் உள்ளது. அழிந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்திய நாட்டின் தேசிய விலங்காக உள்ள புலி 2000ஆம் ஆண்டில் ஆயிரத்து 700ஆக இருந்தது.
இந்தியாவின் தேசிய விலங்காக போற்றப்படும் புலியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து பல வன பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2ஆயிரத்து 967 ஆக உள்ளது. புலிகளில் சைபீரியன் புலிகள், பெங்கால் புலிகள், தென் சீன புலிகள், ஜாவா புலிகள், சுமத்திரா புலிகள், மலாயன் புலிகள், இந்தோனேசிய புலிகள், பாலி புலிகள், காஸ்பியன் புலிகள் என 9 வகை புலிகள் உலகில் உள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கையை பெருக்கவும், பாதுகாக்கவும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 76ஆக இருந்தது. தற்போது புலிகளின் எண்ணிக்கை 354ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து, விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறியதாவது, "தமிழ்நாட்டில் முக்கிய புலிகள் காப்பகமும், அதிக புலிகளின் எண்ணிக்கை கொண்டதுமான முதுமலை புலிகள் காப்பகம் மட்டும் 162 புலிகள் இருக்கின்றன. மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் மொத்தம் 192 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 60 விழுக்காடு வனப்பகுதிகளில் 250க்கும் அதிகமான புலிகள் உள்ளன.
புலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாக காரணமாக இருப்பதே புலிகள் தான். காடுகளை ஆக்கிரமித்தல், காடுகளை ஒட்டி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் தடுத்து காடுகளை பாதுகாத்து அழியும் பட்டியலில் உள்ள நமது தேசிய விலங்கான புலியை பாதுகாக்க வேண்டுமென உறுதிமொழி ஏற்போம். பொதுமக்களிடையே இது குறித்து இந்த நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்!