நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவாலாவை ஒட்டியுள்ள வாளவயல் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகளை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் விரட்டுவது வழக்கமாக நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று (நவ.19) யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பொழுது, அரிசி ராஜா என்ற யானை திசை மாறிச் சென்று, பாப்பாத்தி (60) என்பவரது வீட்டை சூறையாடியது. வீட்டில் இருந்த பாப்பாத்தியையும் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த பகுதியில் அரிசி ராஜா யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரிசி ராஜாவை, கும்கி யானைகள் மூலம் பிடித்து அருகில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை, முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி பார்வையிட்டார்.