நீலகிரி: கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் கோடை விழாக்களும் களைகட்டி நடந்து வருகிறது. உதகையில் கடந்த 6 ஆம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கிய இந்த கோடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (மே.11) கூடலூரில் பத்தாவது வாசனை திரவிய கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று உதகை அரசு ரோஜா பூங்காவில் 18 வது ரோஜா கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
நுழைவு வாயில் பகுதி முதல் பூங்கா முழுவதும் வைக்கப்பட்டுள்ள உருவங்கள் முழுக்க முழுக்க வண்ண வண்ண ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிப்பது போல் இருந்ததாக சுற்றுலா பயணிகள் கருதினர். குறிப்பாக 35,000 ரோஜாக்களை கொண்டு 35 அடியில் அமைக்கப்பட்டுள்ள ஈபில் டவர், பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர 4000 ரோஜாக்களை கொண்டு ஊட்டி 200 மற்றும் செல்பி ஸ்பாட், முயல், 10,000 ரோஜாக்களால் குட்டி யானைகள், கால்பந்து, 2400 ரோஜாக்களால் ஹாக்கி பந்து, மயில் உள்ளிட்ட பல உருவங்கள் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 3 நாட்கள் நடக்கும் இந்த ரோஜா காட்சி நேற்று துவங்கி வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 18-வது ரோஜா கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், கைத்தறி அமைச்சர் R.காந்தி ஆகியோர் துவக்கி வைத்து, கண்காட்சியில் இருந்த பல்லாயிரம் ரோஜாக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள உருவங்களை பார்வையிட்டனர். மேலும் இந்த முறை அரசு ரோஜா பூங்காவில் 80 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு பல வடிவமைப்பு உருவங்கள் வைக்கப்பட்டுள்ளது வியப்படையச் செய்துள்ளதாக ரோஜா கண்காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் முன் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம், செல்பி எடுத்து கோடை விடுமுறையை கழித்து மகிழ்ந்தனர்.