நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீருக்காக மக்கள் இரவும், பகலும் நீண்ட துாரம் நடந்து சென்று நீரை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், குன்னூரில் பருவ மழை தொடங்கியும் ரேலியா அணையில் நீர்மட்டம் உயராமல் குறைந்துள்ளது. இதனால், தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டும் நீர் தொட்டிகளில் இருந்தும் குடிநீர் வீணாகி செல்கிறது. ஏற்கனவே தொடங்கிய எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் மந்தமாக நடந்துவருகிறது.
பல இடங்களிலும் வீணாகி செல்லும் தண்ணீரை சேமித்து வைத்து வழங்கக் கூடிய திட்டங்களை ஏற்படுத்தவும், செயல்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவும், உடைந்த குழாய்களை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.