நீலகிரி: நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
நிகழ்ச்சியில் காவல்துறை சார்பாகப் பேண்டு வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதைகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் உதகை கோட்டாட்சியர் குன்னூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்குடியினர்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 77வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகளை ஏந்தி அணிவகுத்து நிற்க, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 77 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்றன.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா மூவர்ண தேசியக் கொடி ஏற்றினார். அப்போது முகாமில் அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் பட நாயகன், பொம்மன் உள்ளிட்ட யானை பாகன்கள் கலந்து கொண்டனர்.
யானைகள் வளர்ப்பு முகாமில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியைக் காணத் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர்கள் முதுமலை வருகை புரிந்திருந்தனர். தேசியக் கொடிகளுடன் அனுபவித்து நின்ற யானைகள் முன்பு நின்று செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Independence Day 2023: சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய கோயில் யானை..!