தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா நோய் தொற்று அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த நோய் தொற்று சமூக தொற்றாக மாறி வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன. மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருள்களை மட்டும் வாங்க அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, நகராட்சி சந்தை போன்ற இடங்களில் சமூக இடைவெளி பேணும் பொருட்டு, மக்கள் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த தற்காலிகமாக மூடப்பட்டன. இந்நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப காந்தி மைதானம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சந்தைகள் செயல்படத்தொடங்கியுள்ளன. இருப்பினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பாதாலும் நேற்று முதல் பகல் 2:30 மணி வரைதான் சந்தை என்பதாலும் அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதனையடுத்து உதகை நகராட்சி சந்தைக்கு அருகாமையில் செயல்பட்டு வந்த மருந்து கடை ஒன்று சமூக இடைவெளி, அரசு அறிவித்த எந்த முன் எச்சரிக்கைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்தது. அந்த கடைக்குச் சென்று ஆய்வு செய்த வருவாய்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சமூக இடைவெளி பின்பற்றாமல் இறைச்சிக்கடைகளில் அதிக கூட்டம் கூடியதையடுத்து அந்தக் கடைகளை மூட வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.
மேலும் பொதுமக்கள் அனைவரையும் வெளியே அனுப்பி சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரை வழங்கினர். இதேபோல நகராட்சி சார்பில் முக்கிய சாலைகளின் இருபுறமும் கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.