தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளுடன் சில கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் எந்தத் தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. நேற்று முதல்கட்ட ஆய்வுக்கூட்டத்தில் வணிகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " மே 6ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடை நடத்துபவர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போதுபோலவே தற்காலிக காய்கறிச் சந்தை செயல்படும். மக்கள் அனைவரும் முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு சென்றுவந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் குறித்து கணக்கெடுத்து கண்காணித்து வருகிறோம். தற்போதுவரை கோயம்பேடு சென்றுவந்த 43 பேரில் 33 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இ- பாஸ் பெறுவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 6ஆம் தேதி முதல் எந்தெந்த கடைகளை திறப்பது குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனைக்கூட்டம் நாளை(இன்று) நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சர்க்கஸ் தொழிலாளர்கள் !