நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராணுவ பயிற்சி மையத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கியராஜ் மற்றும் நாயக் இர்பான் ஆகியோர் ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்திய ராணுவ விளையாட்டு மையத்தின் வழிகாட்டுதலின்பேரில் மெட்ராஸ் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங் மற்றும் பயிற்சியாளர் லெப்டினன்ட் கர்னல் ஹேமந்த் ராஜ் ஆகியோரின் ஊக்குவிப்பு மற்றும் வீரர்களின் தன்னம்பிக்கை, விடா முயற்சியின் பலனாக இவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக தங்கராஜ் விளையாட்டு திடலில் இந்திய ராணுவ விளையாட்டு மையம் சார்பில், சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் ஆரோக்கியராஜ் பல தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் அர்ஜூனா விருது பெற்றுள்ளார்.
மற்றொரு வீரரான இர்பான் 20 கி.மீ தூரம் நடை போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் ஏற்கனவே பல போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.