நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இவற்றில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். குறிப்பாக சித்தி விநாயகர் தெரு, எம்ஜிஆர் நகர், காந்திபுரம், விநாயகர் கோவில் தெரு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் வீடுகள் நடுவே மின் கம்பங்கள் உள்ளன. இவற்றை பொருட்படுத்தாமல் வீட்டில் வசிப்பவர்கள் அச்சமின்றி வாழ்ந்துவருகின்றனர்.
இந்த மின் கம்பங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் அங்கிருக்கும் வீடுகளுக்கு செல்கின்றன. இதன் மின் வயர்கள், கைகள் தொடும் தூரத்தில் உள்ளதால் மின்சாரம் தாக்கி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருவங்காடு பகுதியில் மின் வயரை தொட்டு சிறுவன் ஒருவன் உடல் கருகி உயிரிழந்துள்ளான். எனவே வீடுகள் நடுவே உள்ள மின் கம்பங்களை, திறந்தவெளியில் நடவேண்டும் என்று மின்சாரத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.