நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டபேரவைத் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை முதல் 4 இடங்களை பிடிக்கும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், திமுக வேட்பாளர் ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் வினோத் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது.
குன்னூர் தொகுதி வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வோம் என்று ஈடிவி பாரத்தின் சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளனர். அவை பின்வருமாறு, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "இலவசம் என்பது தேவையில்லாத ஒன்று. கட்சிகள் இலவசத்தை அளிப்பதாகக் கூறி வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி மக்களை சோம்பலுக்கு ஆளாக்கி வருகின்றனர். குன்னூரில் பேருந்து நிலையத்தை இடம் மாற்ற வேண்டும். வாகன நிறுத்துமிடம் வசதி ஏற்படுத்த வேண்டும். முழுமையான குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் எம்எல்ஏ அலுவலகம் வைக்கப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்படும்" என்றார்.
திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் கூறியதாவது, "தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 30 ரூபாய் விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித் தொகை பெற்றுத் தரப்படும். வீடில்லாமல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனக் கூறினார்.
அதிமுக வேட்பாளர் வினோத் தெரிவித்தாவது, "கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களிடையே தெரிவித்து பரப்புரை மேற்கொண்டு உள்ளோம். குன்னூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டமும் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். குன்னூர் கோத்தகிரியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். இங்குள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தி மேம்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
அமமுக வேட்பாளர் கலைச்செல்வன் மக்களிடையே எளிமையாக பழகுவதால் ஏழை மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களிடயே மிகுந்த செல்வாக்கு இவருக்கு உள்ளது. அ.ம.மு.க வேட்பாளர் கலைசெல்வன் வாக்குக்களை பிரிப்பதால் வெற்றிபெறுவது அதிமுக வேட்பாளரா அல்லது திமுக வேட்பாளரா என்பதால் கடும் போட்டி நிலவுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள்