ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லைகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் ஏப்ரல் 6ஆம்தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து உதகையில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தலுக்கான சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் பாண்டிய ராஜன் உள்பட கேரளா மாநிலத்தின் வயநாடு, மலப்புரம் மாவட்டங்கள், கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு, மாநில எல்லைகள் வழியாக சட்டவிரோதமாகப் பண பரிமாற்றம், மதுபானங்கள் கடத்தல் உள்ளிட்டவற்றைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக கேரள வனப் பகுதியில் அதிக மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதால், அதனைக் கண்காணிப்பது, கரோனா பரவல் அதிகரித்துவருவதால் அதனைத் தடுக்க மாநில எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் ஈடிவி பாரத்திற்கு தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருது!