சில தினங்களுக்கு முன் நீலகிரியின் மசினகுடியில் கால்நடைகள் மேய்க்கச் சென்ற முதியவர் டி23 புலி தாக்கி உயிரிழந்தார். ஏற்கனவே டி23 புலியால் மனித உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும் நிலையில், மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
ஆகையால் புலியை சுட்டுப்பிடிக்கக்கோரி, பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.
கடைக்குட்டி உதயன்
உத்தரவின் பேரில் களமிறங்கிய வீரர்கள் அக்டோபர் 15ஆம் தேதி டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து டி23 புலியை உயிருடன் பிடிக்க காரணமாக இருந்த அனைவருக்கும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் புலியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்த கும்கி யானை உதயனின் செயலைப் பாராட்டி, பலரும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிட்டு ஹார்ட்டின்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். புலி தாக்க வருவதைக் கண்டும் பின்வாங்காமல் செயல்பட்ட கும்கி உதயனின் பின்னணி குறித்து கீழே காண்போம்.
நீலகிரியின் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், மக்னா வகை யானையான உதயன் பராமரிக்கப்படுகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு இதே முகாமில் கடைக் குட்டியாக பிறந்ததே உதயன். இதற்கு பிறகு முகாமில் வளர்ப்பு யானைகள் ஏதும் குட்டிகளை பெற்றெடுக்கவில்லை.
குறும்பு - சமத்துக்குட்டி
ஆக கடைக்குட்டி என்பதால் உதயனுக்கு குறும்புத்தனமும், முரட்டுத்தனமும் அதிகம். பாகன்களை தாக்க முயல்வது உள்பட உதயனின் குறும்பும், முரட்டுத்தனமும் நீண்டு கொண்டே செல்லும். இரண்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து கீழே இறங்க முயன்ற பாகனின் காலை கடித்து காயப்படுத்திய செயல் போல, உதயனின் திருவிளையாடல்கள் கணக்கிலடங்காதது.
இருப்பினும் சில காலமாகவே கும்கி யானையின் குறும்புகள் குறையத் தொடங்கி, நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து கூடலூரில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானைகளை விரட்டுதல், வாழைத்தோட்டம் பகுதியில் திரிந்த ரிவால்டோ யானையை ஊருக்குள் வராமல் தடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக உதயன் ஈடுபடுத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக உதயன் வனத்துறையினரின் பாராட்டை பெற்றது.
புலியை பிடிக்கும் பணியில் உதயன்
இந்நிலையில் மசினகுடி பகுதி மக்களை உயிர் பயத்தில் உறைய வைத்திருந்த, டி23 புலியை பிடிக்கும் பணியில் உதயன் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 15ஆம் தேதி உதயனின் பின்வாங்காத போர்குணத்தின் காரணமாகவே மயக்க ஊசி செலுத்தி புலி பிடிக்கப்பட்டது.
வனப்பகுதியில் உள்ள புதர் ஒன்றில் புலி பதுங்கியிருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், உதயன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகளை புலியை பிடிக்கும் பணிக்காக அழைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்தினை வந்தடைந்த கும்கி யானை உதயன், அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நின்றிருந்த கால்நடை மருத்துவர், வனச்சரகரை தன் மீது ஏற்றிக் கொண்டது.
அச்சம் - அசாத்திய தைரியம்
யானை பாகன் சுரேஷும், புலி இருக்கும் பகுதியை நோக்கி செல்ல உதயனுக்கு கட்டளையிட்டார்.
அப்போது புதரில் பதுங்கியிருந்த புலி, உதயனைக் கண்டதும் உறுமி அச்சுறுத்தியது. முதல்முறையாக புலியை கண்டு அச்சமடைந்தபோதும், வேறு பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற புலியை மறித்து நின்றது.
பின்னர் வன கால்நடை மருத்துவர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினார். இறுதியில் மனித உயிரிழப்புகளுக்கு காரணமாகி, 20 நாட்களாக வனத்துறையினரை அலைக்கழித்த டி23 புலி ஒரு வழியாக பிடிபட்டது.
ஓவர் நைட்ல ஒபாமா
உதயனின் செயலுக்கு தமிழ்நாடு வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு, தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட பதிவுடன் கூடிய பாராட்டுகளை தெரிவித்தார். அசாத்தியமான செயலை சாத்தியமாக்கிய உதயன் யானையின் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
'ஓவர் நைட்ல உங்க அண்ணன் ஒபாமாவுக்கு ஈக்வல் ஆகிருவன்டா' எனும் ரேஞ்சில் உதயன் யானையின் செயல் சமூக வலைதளங்கள் மூலம் பட்டி தொட்டியெங்கும் பரவி வருகிறது. உதயனின் உதவியால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: T 23 புலி உடல்நிலையில் முன்னேற்றம்