நீலகிரி: சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டாரத்தில் பறவைகள் அதிகளவில் காணப்படும் பகுதி சிம்ஸ் பூங்கா ஆகும். இங்கு நூற்றாண்டு பழமையான மரங்கள், செடிகள் அதிகமாக உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்கின்றனர்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக 8 மாதங்கள் பூங்கா பூட்டப்பட்டது. பின்னர் மாவட்டம் முழுவதும் பூட்டப்பட்ட பூங்காக்களும், சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது.
இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். அதன்படி பிப்ரவரி ஒன்றாம் தேதிமுதல் படகு சவாரி தொடங்கப்பட்டது. 11 மாதங்கள் கழித்து படகு சவாரி தொடங்கியது, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.