உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பழங்குடியின தொழில்முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, பழங்குடியினர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், பழங்குடியின மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வரும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு பரிசுகளை வழங்கிய ஆளுநர், ஆதிவாசி மக்கள் குறித்த மூன்று புத்தகங்களையும் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பழங்குடியின மக்கள் மத்தியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகள் செய்துவருவதாகவும் அந்த திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய செய்ய வேண்டும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செய்து வருவதாக கூறிய அவர் மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசன்ட் திவ்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிகமான பழங்குடியினருக்கு ரத்த நோய் பாதிப்பு இருப்பதாகவும் அந்த நோயை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றார். அதற்காக அதிகமான மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகமும், ஆதிவாசி தொண்டு நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார்.
மேலும், அடிப்படை வசதிகள் தேவைப்படும் ஆதிவாசி மக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர் தெரிவித்தார்.