நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டுவருகிறது. இந்த முகாமில் வன கால்நடை மருத்துவர் பணியிடம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நேற்றைய முன்தினம் வரை காலியாக இருந்துவந்தது.
வன கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் முகாமில் உடல்நலம் பாதிக்கப்படும் யானைகளுக்கு கோவையிலிருந்து வன கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
அதேபோல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் உயிர் இழந்தால் அதனை பிரேத பரிசோதனை செய்யவும் கோவையிலிருந்து கால்நடை மருத்துவர் வரவேண்டிய சூழல் இருந்தது.
இதனால், நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு, வனவிலங்குகள் உயிர் இழந்த சம்பவங்களும் ஏற்பட்டன. எனவே முதுமலையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு காலியாக உள்ள வன கால்நடை மருத்துவர் பணியிடத்தை நிரப்ப வன உயிரின ஆர்வலர்கள் சார்பில் தொடர் கோரிக்கைவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 32 மாதங்களுக்குப் பிறகு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு நிரந்திர வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் என்பவர் நேற்று (அக். 17) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு