நடிகர் விவேக் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடிகர் விவேக் தலைமையில் நடைபெற்றது. தனது பிறந்தநாளை பள்ளி மாணவ-மாணவிகளின் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறகு அதிக மழை தரக்கூடிய சோலை மரக்கன்றுகளை மாணவர்களின் முன்னிலையில் நடவு செய்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விவேக், இயற்கையை நேசிக்க வேண்டும், இயற்கைதான் நம் கடவுள் என்றார். இயற்கையைப் பாதுகாக்க தவறியதால்தான் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நெகிழிப் பொருள்களை சாலையோரம், வனப்பகுதிகளில் வீசிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நீலகிரி மலைத்தொடர் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் நடிகர் விவேக் கூறினார்.