உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனிடையே உதகையிலிருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் மழையின் காரணமாகப் பெரிய மரம் நேற்றிரவு விழுந்தது. மத்திய பேருந்த நிலையம் அருகே தாமஸ் தேவாலயம் பகுதியில் விழுந்த இந்த மரத்தால் உதகையிலிருந்து நஞ்சநாடு, இத்தலார், எமரால்டு, கல்லக்கொரை உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அரசுப் பேருந்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், மாற்று வழியில் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினரும் மின்வாரிய ஊழியர்களும் நீண்ட நேரம் போராடி மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் உதகை – அவலாங்சி சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.