நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை சில இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக இந்த அணைக்கு வந்துள்ளனர். தற்போது அணையின் நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில் கரையில் அங்கு நடந்து சென்றபோது காலிடறி கற்கள் என நினைத்து கீழே பார்த்துள்ளனர்.
அது கல் இல்லை சிலைகள் என தெரிய வந்ததையடுத்து அவற்றை மண்ணிலிருந்து எடுத்து பார்த்தபோது அவை ராகு, கேது, காளிகேஷ்வரர், சனி பகவான், சுக்ரன் உள்ளிட்ட ஆறு சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக வருவாய்த் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
கோட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு செய்த பின்னர் அவை கற்சிலைகள் எனத் தெரிய வந்தது. இதனையடுத்து ஆறு சிலைகளை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்தச் சிலைகளை மாவட்ட ஆட்சியர் தொல்லியியல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும், இந்தச் சிலைகள் வேறு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டு இந்த அணையில் வீசிச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை செய்துவருகின்றனர்.