நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை கடந்த 19ஆம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து, யானைக்கு தீக்காயம் ஏற்படுத்திய நபர்களை, முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
அதில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இரவு நேரத்தில் சென்ற யானை மீது, சிலர் கார் டயரில் தீ வைத்து எறிந்ததாக தகவல் கிடைத்தது.
பின்னர், மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த மல்லன் என்பவரது இரண்டு மகன்களும், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(36) என்பவரும் சேர்ந்து யானைக்கு தீ காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதில் மல்லன் என்பவரது மூத்த மகன் ரிக்கி ராயன்(31) தப்பியோடிய நிலையில், இளைய மகன் ரேமண்ட் டீன்(28) மற்றும் பிரசாத்(36) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் யானையை விரட்ட கார் டயரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து யானையின் மீது எறிந்ததாக தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு காவல் துறையினர் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: யானை மீது எரியும் டயரை வீசும் நபர்கள் - பதைபதைக்க வைக்கும் காணொலி