தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 30ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட 10ஆவது வார்டு ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், எவ்வித காரணங்களும் கூறாமல் தனது வேட்பு மனுவை நிராகரித்ததாக கூறி ஆனந்தன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையிட வந்துள்ளார். அப்போது, அலுவர்கள் அவருக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த ஆனந்தன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதிரே உள்ள எம்ஜிஆர் நகரில், வீட்டு மாடியில் உள்ள தனியார் நிறுவன செல்ஃபோன் கோபுரம் மீது ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் உள்ளிட்ட காவல் துறையினர், ஆனந்தை கீழே இறங்குமாறு கூறினர். இதையடுத்து செல்ஃபோன் மூலம் ஆனந்தனிடம் காவல் துறையினர் பேசினர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஆனந்தன் கீழே இறங்கினார்.
கீழே இறங்கிய ஆனந்தனை காவல் துறையினர் கைது செய்து தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தன் கூறியதாவது, மதுக்கூர் ஒன்றியத்தில் பத்தாவது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த என்னுடைய மனுவை அலுவலர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவன் எனக் கூறி, திட்டமிட்டு வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர். இதனைக் கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு; பொறியாளருடன் மக்கள் வாக்குவாதம்!