தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் சில தினங்களுக்கு முன் மண்டை ஓடு, எலும்புகள், தாலி, செயின், துணி, கொலுசு, கால் செருப்பு ஆகியப் பொருட்கள் கிடந்தன.
அவ்வழியாக ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் பார்த்துவிட்டு உடனடியாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தனிடம் இதுகுறித்து தெரியப்படுத்தினார்கள். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் தெரியப்படுத்தினார் .
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த டிஎஸ்பி புகழேந்தி, இன்ஸ்பெக்டர் கென்னடி, சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அதனை ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா என்றும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களுக்கும் சென்று இந்தப் பெண் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது வரை யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்த இடத்தில் கிடந்த பெண்ணின் ஆடைகளை வைத்தும், பொருட்களை வைத்தும் கணினி உதவியுடன் அவரை வரைந்தனர்.
அந்த வரைபடத்தை டிஎஸ்பி புகழேந்தி செய்தியாளர்களிடம் காண்பித்து அவர் பற்றிய விவரங்கள் கிடைத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அப்படி தெரியப்படுத்தும் பட்சத்தில் அதை ரகசியமாக வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் தனது செல்ஃபோன் நம்பருக்கு (94981 45099) தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று!