தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆரியப்படைவீடு ஊராட்சியில் மன்ற உறுப்பினராக உள்ளவர் பாமகவைச் சேர்ந்த சந்தானதேவி (38). இவரது கணவர் மாசிலாமணி, கம்பி பிட்டர் பணி செய்து வருகிறார். இரு ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாமணி தனது சகோதரி திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியாக சரியாக செலுத்தியதுடன் மேலும் கடன் தொகைக்காக தங்களது ஒரு லட்சம் ரூபாய் சீட்டை எடுத்து அதனையும் முழுமையாக அய்யப்பனிடம் கொடுத்துள்ளார். பணம் முழுவதும் கொடுத்தபோதும், கடன் தொகை அடையவில்லை எனக் கூறிய அய்யப்பன் மேலும் 2 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கேட்டுள்ளார்.
தொடர்ந்து இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்புகொண்டு தொந்தரவு தந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாசிலாமணி கையொப்பமிட்ட காசோலை அய்யப்பனிடம் இருப்பதாகக் கூறி, அதில் 5 லட்சம் ரூபாய் வரை பூர்த்தி செய்து கொண்டு, 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளீர்கள் எனக் கூற முடியும் என மிரட்டியுள்ளார்.
இதில் அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் ஆன மாசிலாமணியின் மனைவியும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான சந்தானதேவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்டீஸ்வரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர் தற்கொலை; கந்துவட்டி அனிதா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!