தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதியில் பிரசித்தி பெற்ற ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் மற்றும் 108 வைணவத் தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த இரு கோயில்களும் சன்னாபுரம் மற்றும் அனக்குடி கிராமங்களில் அமைந்து உள்ளன.
இந்த இரு கிராம நிலங்கள் அனைத்தும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, தவறுதலாக கோயில் வகை நிலங்கள் என நிலப் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கான பட்டா கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.
இதனை மாற்றும் அதிகாரம் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலருக்கு இருந்த போதும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை மற்றும் அதனை செயல்படுத்த முன் வரவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை உயர் நீதிமன்றம் என பலவற்றில் முறையிட்டும், இதற்கு நிரந்தரத் தீர்வான மறுநில அளவை மேற்கொள்ள யாரும் முன்வராமல் கோரிக்கைகள் கிடப்பில் போட்டப்பட்டது.
இனியும் தாமதிக்கக்கூடாது என்ற ரீதியில் இந்த இரண்டு கிராம மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருநாகேஸ்வரம் பெரியார் சிலை சந்திப்பு அருகே ஒன்று கூடி, இன்று (அக்.4) முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க திட்டமிட்டு நேரில் ஊர்வலமாகச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ஊர்வலம் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் போராட்டக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மட்டும் மேற்கொண்டனர்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் வந்து பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, அமைதி பேச்சுவார்த்தையானது வருகிற 20ஆம் தேதி கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்ப்பாட்டக்குழுவினர், “தமிழக அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் 40 ஆண்டு கால இடர்பாடுகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, நில அளவீடு செய்து உட்பிரிவுகள் ஏற்படுத்தி அனைவருக்கும் பட்டா வழங்க முன்வராவிட்டால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என வேதனையுடன் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க:வருமான வரித்துறையினரை திமுகவினர் தாக்கிய வழக்கு; ஜாமீனில் வெளியே உள்ள 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!