தஞ்சை மாவட்டம் ஊமத்த காடு ஊராட்சியில் அமைந்துள்ளது பெத்தனாட்சி வயல் கிராமம். 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இக்கிராமத்திற்கு இதுவரை அரசின் எந்த அடிப்படை வசதிகளும் சென்றடையவில்லை. உணவு, உடை, பிரசவம், கல்வி, பேருந்து போன்ற எந்தவித அத்தியவசிய தேவைகளுக்கும் இவர்கள் 15 கிலோமீட்டர் தூரம் நடந்துச் செல்ல வேண்டும். மேலும் இங்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தும், அதில் 6 குழந்தைகள் மட்டுமே பள்ளிக்குச் செல்கின்றனர்.
குறிப்பாக இப்பகுதி பெண்கள் பிரசவ காலங்களில் மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர். தண்ணீர் எடுக்கக்கூட இவர்கள் தினமும் 2 கிலோமீட்டர் தூரம் சென்று ஆற்றுப் படுகை நீரை பருகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் மின்சாரமும் இல்லாததால் இரவில் பூச்சிகள், ஊர்வண உள்ளிட்டவைகளால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இவர்களின் அத்தியாவசிய உணவு பனங்கிழங்குகள் மட்டும்தான்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், "தேர்தலின் போது அரசியல்வாதிகள் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்து விட்டு தேர்தல் முடிந்ததும் எங்களை மறந்துவிடுகின்றனர்" என்கின்றனர். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தருவேன்’ - ஊராட்சி மன்றத் தலைவரான இளம் பட்டதாரிப் பெண்!