தஞ்சாவூர்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகள் கிளைகள் ஆய்வு மற்றும் இணைப்பு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான வேல்முருகன் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் எந்த ஆட்சிகள் ஆண்டாலும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் அடுக்கடுக்கான துரோக ஆட்சிகளாகத்தான் இருந்து வருகிறது. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் 12 டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட உத்தரவிட்டிருக்கிறது. அந்தத் தண்ணீர் மழையின் காரணமாக உபரி நீராகத் திறந்து விடப்பட்டதா? அல்லது உண்மையிலேயே குறுவை, சம்பா சாகுபடிகளுக்காகத் திறந்து விடப்பட்ட நீரா? என்பதைத் தமிழ்நாடு அரசு தான் விளக்க வேண்டும்.
காவிரியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கிற தேசிய கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்படத் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது வரவேற்கத்தக்கது. ஆனால் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைக் காவிரி நதி நீர் ஆணையம் வழங்கிய தீர்ப்பின்படி, குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளுக்குத் திறக்க வேண்டிய தண்ணீரை வழங்காத கர்நாடகா அரசைக் கண்டிக்கும் வகையிலும், நமது ஒற்றுமையைக் காட்டுகின்ற வகையிலும் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி நமது வலிமையை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். கர்நாடக அரசுக்கு உணர்த்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற நரேந்திர மோடி நிலவில் தடம் பதித்த விஞ்ஞானிகளின் அரிய உழைப்பான சந்திரயான்-3 லேண்டர் இறங்கிய பகுதியை இந்து மதம் சார்ந்த சிவசக்தி என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு அதில் அறிவியல் பூர்வமான விண்கலங்களுக்கு விஞ்ஞான பூர்வமான பெயர் சூட்ட வேண்டுமே தவிர தன் கட்சி எடுத்திருக்கிற கொள்கை சார்ந்த பெயர் சூட்டலைப் பிரதமர் தவிர்த்து இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் அடிங்க: ADITYA L1: அடுத்த டார்கெட் சூரியன்.. செப்.2ல் விண்ணில் பாய்கிறதா இஸ்ரோவின் அடுத்த இலக்கு?